General

குட்டி காஷ்மீர் போல் காட்சியளித்த ஊட்டி.. குன்னூர் கோவையிலும் கடும் பனி

ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி நிலவுவதால் அப்பகுதியே பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கிறது. கடும் பனியால் சில வாரங்களில் தேயிலைச் செடிகள் கருகிவிட வாய்ப்புள்ளது என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பனிக்காலம் என்பதால் நீர்ப்பனி மற்றும் உறைபனி காணப்படும். நீர் பனி தொடங்கிய பின்னர் சில வாரங்களில் உறைபனி தொடங்கும்.

கடந்த நவம்பர் மாதமே நீர்ப்பனி தொடங்கிய நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருந்தது. மேலும் டிட்வா உள்ளிட்ட புயல்களால் நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடுமையான மழை பாதிப்பு இருந்தது. இதனால் இந்த உறைபனி சற்றே தள்ளி ஆரம்பித்தது.

அதேபோல் எப்போதும் ஊட்டியில் தான் உறைப்பனி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஊட்டியை அடுத்த மஞ்சூர் மற்றும் குன்னூர் பகுதிகளில் கடந்த வாரம் உறைபனிப் பொழிவு தொடங்கியது.

இந்தநிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில இடங்களில் நேற்று முன்தினம் உறை பனிப்பொழிவு தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும் கடும் குளிர் நிலவியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

இந்த நிலையில் இரண்டாவது நாளான நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் 2 டிகிரி செல்சியஸ் ஆகவும், ஊட்டி காந்தல் மற்றும் தலை குந்தா பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் ஆகவும், மஞ்சூர் அடுத்த அவலாஞ்சி பகுதியில் மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவானது.

இதன் காரணமாக ஊட்டி நகரில் குதிரை பந்தய மைதானம், காந்தல், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி நிலவியது. தலைக்குந்தா பகுதியில் காணப்பட்ட உறை பனியால் பல்வேறு பகுதிகள் குட்டி காஷ்மீர் போல் காட்சியளித்தது.

பச்சை புல் மைதானங்களில் வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் உறைபனி நிலவுவதால் அப்பகுதியே பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கிறது.

எனவே அப்பகுதிகளில் அதிகாலை நேரத்தில் வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

அதேசமயம் உறைபனி இந்த முறை வழக்கத்தை விட மிக அதிகமாக காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கேரட் அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் சில வாரங்களில் தேயிலைச் செடிகள் கருகிவிட வாய்ப்புள்ளது என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் கோவை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் காலை நேரங்களில் கடும் பனி மூட்டம் நிலவுவதால் பள்ளி, மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்ளும் சூழல் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version