Cinema

சிம்புவின் டோன்ட்கேர் மென்டாலிட்டி

பொதுவாக ஒரு ஹீரோ வெற்றி பெற்று விட்டால், அடுத்தடுத்து அவர் உற்சாகமாக இயங்குவார். படம் தோல்வி அடைந்தால், கொஞ்சம் நிதானமாகி, சரியாக திட்டமிட்டு, வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இயக்குவார்.

ஆனால் சிலம்பரசன் இதற்கெல்லாம் அப்பாலுக்கும் அப்பாற்பட்டவர்.

சிம்புவின் நடிப்பில் அண்மையில் தெறிக்க விட்ட படம் என்றால் மாநாடுதான். படம் சம்மந்தப்பட்டவர்கள், விநியோகஸ்தர்கள், ரசிகர்கள், தயாரிப்பாளர் எல்லோரையும் சந்தோஷத்தில் மிதக்க வைத்து, மாநாடு திரைப்படம் கண்ட ஆர்கானிக் வெற்றி அபாரமானது.

ஆனால் அடுத்து சிம்புஎன்ன செய்தார்?

ஹன்சிகா மோத்வானிக்கும் இவருக்கும் காதல்.. பிரிவு.. என்று வந்து, ஹன்சிகா சிம்பு மீது குற்றச் சாட்டுகள் சொன்ன நிலையில் , அவற்றை உடனே தண்ணீர் ஊற்றி அணைக்கும் விதமாக, ஹன்சிகா நடித்த மகா படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுக்க , அதோடு ஹன்சிகா தரப்பு வலுவிழந்து போனது.

அப்புறம் வெந்து தணிந்தது காடு ஓரளவுக்கு மேல் ஓட, அடுத்து வந்த பத்து தலை ஓரளவுக்கு கீழேதான் ஓடியது .

தக் லைஃப் படத்தை ஏன் எடுத்தார்கள் என்று கமலுக்கும் மணிரத்னத்துக்குமே தெரியாது என்ற நிலையில், ஏன் நடித்தார் என்பது சிம்புவுக்கு மட்டும் தெரியவா போகிறது?

இப்படித்தான்…

படம் ஓடுதோ ஓட வில்லையோ, சிம்புவுக்கு தோணும்போதுதான் ஒரு படத்தை ஒத்துக் கொள்வார் அதனால் என்ன வம்பு வந்தாலும் சிம்புவுக்கு டோன்ட் கேர் தான்.

இவர் இப்படி என்றால், வெற்றிமாறன் படம் ஆரம்பிப்பது இந்தியாவுக்கே தெரியும். ஆனால் எப்போது முடியும் என்பது அவருக்கே தெரியாது.

ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் எது என்றாலும் தனக்குப் பிடித்தால் யோசிக்காமல் நடிப்பார் விஜய் சேதுபதி.

இவர்கள் மூவரின் இணைவில் கலைப்புலி தாணு தயாரிக்கும் படம் அரசன். வெற்றிமாறனின் வட சென்னை யுனிவர்ஸாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை, கோவில்பட்டியில் துவக்கி, வெற்றிமாறன் தொடர்ந்து நடத்தி வருகிறார். ஆண்ட்ரியா, கிஷோர் என்று வெற்றிமாறனின் ஆஸ்தான நடிகர்களும் உண்டு, சமுத்திரக்கனியும் இருக்கிறார்.

விடுதலை பார்ட் 2 படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் விஜய் சேதுபதி’ அது தன் மனதுக்கு மிகவும் பிடித்த படம்’ என்று கூறி இருந்தார். அதனால் மீண்டும் அவர் வெற்றிமாறனோடு இணைகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் இனிமேல்தான் என்கிறார்கள்.

சிலம்பரசன் வெற்றிமாறன் இவர்களோடு, அனிருத் இணையும் முதல் படம் இது. ஆனால் அதைவிட முக்கிய விஷயம் என்னெவென்றால், அனிருத் தற்போது சொந்தமாக ஒரு இசை நிறுவனம் துவங்கி,இருக்கிறார். அந்த நிறுவனத்தின் முதல் படமே அரசன்தான்.
எனவே ரஜினி படத்துக்கு இசை அமைப்பதை விட பாடல்களிலும் பின்னணி இசையிலும் அனிருத் இந்தப் படத்துக்கு வெறித்தனமாக இசை அமைப்பார் என்று கணக்குப் போடுகிறது கோலிவுட்

கணக்கு சரிதான்.

தியேட்டர்கள் அரண்மனையானால் அரசன் பேரரசன் ஆவான்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version