Politics
100க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் விடுதிகள் மூடல் – அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வி தரத்தை உயர்த்த, மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தங்குவதற்கு உணவு வசதியுடன் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்த 1,331 ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில், தற்போது, 1,200 மாணவர் விடுதிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. 100 க்கும் அதிகமான விடுதிகள் மூடப்பட்டுள்ளன என அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், “ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், 100 க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் இருந்த 1,331 ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில், தற்போது, 1,200 மாணவர் விடுதிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. 100 க்கும் அதிகமான விடுதிகள் மூடப்பட்டுள்ளன. சுமார் 98,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட இந்த விடுதிகளில், தற்போது, 65,000 மாணவர்கள் மட்டுமே தங்கி படித்து வருகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.
சுத்தமான அறைகள், சுகாதாரமான குடிநீர், தரமான உணவு என்ற அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்கப்படாததால், மாணவர்கள், இந்த விடுதிகளில் சேர்ந்து படிக்க விருப்பம் காட்டுவதில்லை. குறிப்பாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தரமற்றதாக இருப்பதால், அது வீணாகி, கால்நடைகளுக்கு உணவாக விற்கப்படுவதை, ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். பட்டியல் சமூக மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்க வேண்டும் என இந்த மாணவர் விடுதிகள் அமைக்கப்பட்ட நோக்கத்தையே, திமுக அரசு சிதைத்து விட்டது.
பட்டியல், பழங்குடி சமூக மக்கள் முன்னேற்றத்துக்காக, மத்திய அரசு வழங்கும் நிதியைச் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. அந்த நிதியை, இந்த விடுதிகளை மேம்படுத்தப் பயன்படுத்துவதிலிருந்து, திமுக அரசை எது தடுக்கிறது?
இந்த அழகில், சமூக நீதி விடுதி என்று பெயர் மாற்றம் செய்தோம் என, இரண்டு நாட்கள் விளம்பர நாடகம் நடத்தி, தனக்குத் தானே பெருமை பேசிக் கொண்டிருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். உதட்டளவில் சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றுவதில் காட்டும் ஆர்வத்தை, பட்டியல் சமூக மக்கள், மாணவர்கள் முன்னேற்றத்தில் முதலமைச்சர் காட்ட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.