Politics
பாஜக வேட்பாளர்கள் எல்.முருகன் மற்றும் காடேஸ்வரா தங்கராஜுக்கு எதிராக வீடியோ வெளியிட்ட இயக்குநர் அமீர்…!

பாஜக வேட்பாளர்கள் எல்.முருகன் மற்றும் காடேஸ்வரா தங்கராஜுக்கு எதிராக போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு காணொளி மூலம் இயக்குநர் அமீர் வாக்கு சேகரித்தார்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக, பாஜக, நாதக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இயக்குநர் அமீர், திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தினேஷ்குமாரை ஆதரித்து வெளியிட்டுள்ள காணொளியில், அவரை வெற்றி பெறச்செய்வது மக்களின் கடமை என அமீர் வலியுறுத்தியுள்ளார். தினேஷ்குமாரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் மத வெறுப்பு மற்றும் சமூக விரிசலை உருவாக்கும் சிந்தனையைக் கொண்டவர் என குற்றம்சாட்டிய அவர், சமூக நீதி மற்றும் மனிதநேயம் நிலைக்க தினேஷ்குமாரை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதேபோல், அவினாசி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் கோகிலாமணிக்கு ஆதரவாகவும் அமீர் காணொளி வெளியிட்டுள்ளார். மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் பொதுவானவர்களாக இருக்க வேண்டும் என்றும், சாதி-மத வேறுபாடுகளை பொதுவெளியில் வெளிப்படுத்தக் கூடாது என்றும் அவர் கூறினார். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த கோகிலாமணியின் போராட்ட மனப்பாங்கும் சிந்தனையும் அவரின் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது என தெரிவித்தார்.
அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் மத வெறுப்பு மற்றும் சமூக வன்மத்தை தூண்டும் எண்ணம் கொண்டவர் என விமர்சித்த அமீர், அவினாசி தொகுதி மக்கள் டாக்டர் கோகிலாமணியை தேர்ந்தெடுத்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.