Latest
மு.க.அழகிரியின் வலதுகரம்! மதுரையின் முக்கிய முகம்! அதிமுகவில் இணைகிறாரா பி.எம்.மன்னன்?

முன்னாள் மத்திய இணையமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்த பி.எம்.மன்னன் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யார் இந்த மன்னன் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
திமுகவில் மு.க.அழகிரிக்கு செல்வாக்கு இருந்த போது மதுரை மாவட்டத்தில் முக்கிய முகமாக திகழ்ந்தவர். அவரது வலது கரம். மு.க.அழகிரி, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலும் அவருடனே நிழலாக இருந்தவர் மன்னன்.
ஒரு காலகட்டத்தில் மதுரை திமுக என்றாலே அழகிரியின் கோட்டை என்று தான் சொல்வார்கள். ஆனால் இன்று அவரது சாம்ராஜ்ஜியம் சரிந்துவிட்டது என்றே சொல்லலாம்.
2014 ஆம் ஆண்டு மு.க.அழகிரியை முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்தவருமான மு.கருணாநிதி கட்சியில் இருந்து நீக்கினாரோ அதோடு சரிந்ததுதான்!
கருணாநிதி இருந்தவரை எப்படியாவது திமுகவில் இணைய அழகிரி முட்டி மோதி பார்த்தார். ஆனால் திமுக பொதுச் செயலாளராக இருந்த கே.அன்பழகன் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அவர் இறப்புக்கு பிறகும் அழகிரி, திமுகவில் மீண்டும் இணைய போகிறார் என்றெல்லாம் பேச்சுகள் அடிப்பட்டன.
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பு விழாவுக்கு கூட மு.க.அழகிரிக்கு அழைப்பிதழ் சென்றது. ஆனால் அவர் தனது மகன் தயா அழகிரியையும் மகள் கயல்விழியையும் அனுப்பி வைத்தார்.
அடுத்தடுத்து உதயநிதி, அழகிரியை சந்தித்தது, மருத்துவமனையில் இருந்த தயாநிதி அழகிரியை முதல்வர் நேரில் சென்று பார்த்தது, ஒரு பள்ளி விழாவில் தனது அண்ணனுடனான நினைவுகளை முதல்வர் பகிர்ந்து கொண்டது என நடந்துவந்தன.
இந்த நிலையில் மு.க.அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். இதனால் அவருடன் இருந்த ஆதரவாளர்கள் ஸ்டாலின் பக்கம் சென்றுவிட்டனர். அவர்களில் முக்கிய ஆதரவாளரான பி.எம்.மன்னன், அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவில் இணையாமல் அதிமுகவில் மன்னன் இணைவது ஏன் என்பது குறித்து தகவலறிந்த வட்டாரங்களில் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறுகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கன்னியாகுமரிக்கு முதல்வர் சென்றிருந்த போது அவரை சந்தித்த மன்னன், பூங்கொத்து கொடுத்து வரவேற்றிருந்தார்.
அப்போது அவரை கட்சியில் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் அதை செய்யவில்லை. இந்த நிலையில் அண்மையில் முதல்வர் ஸ்டாலினை மன்னன், திண்டுக்கல்லில் சந்தித்து பேசியிருந்தார். அப்போது முதல்வரிடம், “என்னை அதிமுக, பாஜகவில் இருந்து கட்சி பணியாற்ற அழைக்கிறார்கள். ஆனால் திமுகவில் இருப்பதிலேயே உறுதியாக இருக்கிறேன்” என சொல்லி பார்த்தாராம். அவர் முதல்வரை சந்தித்து 35 நாட்கள் ஆக போகிறது, இதுவரை எந்த ஒரு கிரீன் சிக்னலும் முதல்வரிடம் இருந்து மன்னனுக்கு கிடைக்கவில்லை.
ஏற்கெனவே 12 ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையில் முடங்கி இருந்த நிலையில் இப்படியே போனால் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என கருதிய மன்னன், அதிமுகவில் இணைய முடிவு செய்திருக்கலாம் என தெரிவித்தனர்.