Politics
ஓசூர் எம்.எல்.ஏ.,வுக்கு ‘சீட்’ மறுப்பு பின்னணி வளர்த்து விட்டவரையே ‘பதம் பார்த்த’ மேயர் சத்யா

ஓசூர்: ஓசூர் சிட்டிங் எம்.எல்.ஏ., பிரகாஷிற்கு ‘சீட்’ மறுத்துள்ள, தி.மு.க., தலைமை, மேயர் சத்யாவிற்கு ‘சீட்’ வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், ஓசூர் சட்டசபை தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இம்முறையும் அவருக்கு தான், ‘சீட்’ வழங்கப்படும் என, கட்சி தலைமை ஆரம்பத்தில் கூறியது. அதை நம்பி அவரும் பணியாற்றினார். ஆனால், நேற்று, தி.மு.க., வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில், ஓசூர் மாநகராட்சி மேயராக உள்ள, தி.மு.க., மாநகர செயலாளர் சத்யாவிற்கு, ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே, தி.மு.க., வட்டாரத்தில், மாவட்ட செயலாளர் பிரகாஷ், வேப்பனஹள்ளி தொகுதிக்கு மாறுகிறார் என தகவல் வெளியானது. ஆனால், அத்தொகுதி போட்டியிட பிரகாஷ் விரும்பவில்லை. கடந்த, 2016 தேர்தலில், தளி தொகுதியில் பிரகாஷ் வெற்றி பெற்றார். 2021 தேர்தலில் அங்கு கூட்டணியான, இ.கம்யூ., கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், ஓசூர் தொகுதிக்கு மாறி வெற்றி பெற்றார். இம்முறை வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட, தி.மு.க., தலைமை கூறியுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதி மாற வேண்டியிருந்ததால், பிரகாஷ் போட்டியிட விரும்பவில்லை என, கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளார். அதன் பின் தான், வேப்பனஹள்ளி தொகுதி, இளைஞரணி மாநில துணைச்செயலாளர் சீனிவாசனுக்கு, ‘சீட்’ ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓசூரில் கடந்த, 2019ல் நடந்த இடைத்தேர்தலில், தற்போதைய வேட்பாளர் சத்யா, தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021ல், ஓசூர் தொகுதிக்கு பிரகாஷ் மாறியதால், சத்யாவிற்கு, ‘சீட்’ இல்லாமல் போனது. அதனால், சத்யாவிற்கு மாநகர மேயர் பதவி கிடைக்க பிரகாஷ் உதவி செய்வதாக உறுதியளித்தனர். அதன்படி சத்யாவிற்கு மேயர் பதவி கிடைத்தது. கட்சியில் மாநகர செயலாளர் பதவியும், பிரகாஷ் பரிந்துரையில் தான் சத்யாவிற்கு கிடைத்தது. இப்படி, யாரால் வளர்ந்தாரோ, அவரை வீழ்த்தி அவரது தொகுதியில் சத்யா சீட் வாங்கியுள்ளார்.
‘சீட்’ மறுக்கப்பட்ட பின்னணி
தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக சத்யா, பிரகாஷ் இடையே விரிசல் உருவானது. இம்முறை பிரகாஷிற்கு ‘சீட்’ கொடுக்க விடாமல் தடுத்து, சத்யா ‘சீட்’ வாங்கியுள்ளார். அதன் பின்னணியில், தி.மு.க.,வின் ‘பென் டீம்’ இருப்பதாக நம்புகிறோம். சத்யாவிற்கு, ‘பென் டீம்’ உறுப்பினர்கள் நல்ல பழக்கம் என்பதால், அவர்கள் மூலமாக காய் நகர்த்தி, பிரகாஷிற்கு கிடைக்க வேண்டிய சீட்டை தட்டி பறித்துள்ளார்.
மேலும், குவாரிகள் மூலம், 1,000 கோடி ரூபாய் பிரகாஷ் முறைகேடு செய்துள்ளார். கட்சியை வளர்க்கவில்லை. கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்வதில்லை என, பல அடுக்கடுக்கான புகார்களை, சத்யா தரப்பினர் கட்சி தலைமையிடம் முன்வைத்தனர்.
அதன் எதிரொலியாகத்தான், சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பினார். இந்நிலையில் தான், சிட்டிங் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோதும், பிரகாஷிற்கு ‘சீட்’ மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.