Politics
வாதாடிய திருமா… உன்னிப்பாக கேட்ட ஸ்டாலின் – நம்பிக்கையுடன் சிறுத்தைகள்!

திமுக – விசிக இடையே தொகுதி பங்கீட்டில் இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில் முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார்.
கடந்த 2021 தேர்தலை விட, இந்த முறை திமுக தனது பலத்தை மேலும் நிலைநாட்டி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த முறை திமுக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகளும் இணைந்துள்ளன. மொத்தம் 21 கட்சிகளுடன் பிரம்மாண்ட கூட்டணி அமைத்துள்ளது.
இதுவரை காங்கிரஸ்(28+1), மதிமுக -4 ஐயூஎம்எல்.- 2 .மமக -2 , கொமதக-2, இந்திய கம்யூனிஸ்ட் 5 என 43 தொகுதிகளை கூட்டணிக்கு கொடுத்துள்ளது.
இன்னும் விசிக, சிபிஎம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.
திமுக தேர்தல் பேச்சுவார்த்தை குழுவுடன் விசிக பேச்சுவார்த்தை குழு இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக இந்த முறை தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் குறைந்தது 10 தொகுதிகளாவது வேண்டும் என்று கேட்டுள்ளது.
ஆனால் புதிய கட்சிகள் தற்போது கூட்டணியில் இணைந்துள்ளதால், பிற கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்து கொடுத்த திமுக விசிகவுக்கு 5 இடங்கள் தருகிறோம் என்று பேசியது.