General

ஈரானை நோக்கி 2,500 வீரர்களுடன் ‘படையெடுக்கும் USS Tripoli போர்க் கப்பல்

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா சுமார் 2,500 கடற்படை வீரர்களையும் ஒரு நீர்நிலப்பரப்பு தாக்குதல் கப்பலையும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கிறது. இதனால் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கைகள் அதி தீவிரமாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானுக்கு எதிராகத் தொடுத்துள்ள ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ போர் 14வது நாளை எட்டியுள்ள நிலையில், உலகளாவிய பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த போர்ச் சூழல் உலக கச்சா எண்ணெய் விலையை விண்ணை முட்டச் செய்துள்ளதோடு, இந்தியாவின் எரிவாயு விநியோகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, டெஹ்ரான் உட்பட ஈரானின் முக்கிய நகரங்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கடும் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்புகளும், ஏவுகணைத் தளங்களும் பெரும் சேதமடைந்துள்ளதாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீர்சந்தியில் போக்குவரத்து முடங்கியதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஓமனில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ள செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் முன்னாள் தலைவர் அலி காமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, புதிய தலைவராகப் பொறுப்பேற்ற மொஜ்தபா காமேனி காயமடைந்திருப்பதாக அமெரிக்கா கூறியிருந்தாலும், அவர் தலைமறைவாக இருந்தபடி அமெரிக்கத் தளங்கள் மீது பதிலடித் தாக்குதல் நடத்த அச்சுறுத்தி வருகிறார்.

இந்த போர்ச் சூழலால் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களைப் பத்திரமாக தாயகம் அழைத்து வர ஏர் இந்தியா சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. பெர்சிய வளைகுடாவில் சிக்கியிருந்த இந்தியக் கப்பல்களில் ஒன்று நகரத் தொடங்கியுள்ள நிலையில், மீதமுள்ள 27 கப்பல்களின் நிலை குறித்த பதற்றம் நீடிக்கிறது.

வளைகுடாப் போரால் நாட்டில் எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் முன் பதிவு செய்ய நீண்ட வரிசைகளில் நிற்கின்றனர்.

அமெரிக்கா 2,500 கடற்படை வீரர்களையும் நீர்நிலப்பரப்பு தாக்குதல் கப்பலையும் அனுப்பி வைக்கிறது.

அமெரிக்காவின் 31-வது மெரைன் எக்ஸ்பெடிஷனரி யூனிட்டைச் சேர்ந்த பிரிவுகளும், USS Tripoli என்ற நீர்நிலப்பரப்பு தாக்குதல் கப்பலும் மத்திய கிழக்கு நோக்கிச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version