Politics
தவெக உடன் கூட்டணி.. ஆசையாக அறிவித்த திருமாவளவனை.. கண்டுகொள்ளாமல் ஓரம்கட்டிய விஜய்!

தவெக உடன் கூட்டணி.. ஆசையாக அறிவித்த திருமாவளவனை.. கண்டுகொள்ளாமல் ஓரம்கட்டிய விஜய்!
உளுந்தூர்பேட்டையில் தொண்டர்கள் திரண்டிருந்த விசிக மாநாட்டு மேடையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட அந்த ஒற்றை அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்திலும் பெரும் புயலைக் கிளப்பும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதை முதல்வர் விஜய் பெரிதாக கண்டுகொள்ளாமல் அமைதியாக இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்துடன் தொடர்ந்து பயணிப்போம் என்று அவர் கூட்டணிக்கு கரம் கொடுத்த விதம், மாநிலத்தின் எதிர்கால அரசியல் கூட்டணிக் கணக்குகளை மாற்றியமைக்கும் முயற்சியாகப் பார்க்கப்பட்டது. அதாவது எதிர்காலத்திலும் தவெக கூட்டணியில் விசிக இடம்பெறும் என்று திருமா கூறி இருந்தார். ஆனால், அந்தப் பிரம்மாண்ட அறிவிப்பு வெளியாகி நாட்கள் கடந்த நிலையிலும், ஆளும் தவெக தரப்பிலிருந்து ஒரு வார்த்தை கூட வராதது.. இதை பற்றி விஜய் வாய் திறக்காதது கடுமையான சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமாவளவனின் இந்த வெளிப்படையான அழைப்புக்கு, தவெக தலைமைத் தரப்பிலிருந்தோ அல்லது கோட்டை வட்டாரத்திலிருந்தோ எந்தவொரு அதிகாரப்பூர்வ வரவேற்போ, எதிர்வினையோ இதுவரை வரவில்லை. விஜய் தரப்பிலிருந்து ஒரு சிறிய அறிக்கை கூட வெளியாகவில்லை.. அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்கள் எவரும் இந்த அறிவிப்பைப் பொருட்படுத்தி ஒரு கருத்தைக் கூடப் பதிவு செய்யவில்லை.
எப்போதுமே சுயமரியாதையையும், சமரசமற்ற கள அரசியலையும் முதன்மையாகப் பேசும் விசிக போன்ற கட்சிக்கு, ஆளும் தரப்பிலிருந்து கிடைத்த இந்த அலட்சியப் போக்கு விசிகவின் அடிமட்டத் தொண்டர்களைக் கடுமையான விரக்திக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியுள்ளது.
தொண்டர்களின் குமுற
பல ஆண்டுகளாக போராட்டக் களங்களில் நின்று, அடக்குமுறைகளை எதிர்த்துத் தங்களின் அரசியல் நிலைநாட்டியவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் நிர்வாகிகள். எந்தவொரு அதிகார மையத்தின் முன்னும் மண்டியிடாத சுயமரியாதை அரசியலே விசிகவின் அடித்தளம்.
ஆனால், தாமாக முன்வந்து கூட்டணி விருப்பத்தைத் தெரிவித்தும், மறுபுறம் துளியும் மதிப்பளிக்காமல் ஆளும் கட்சி மௌனம் காப்பது தங்களின் சுயமரியாதையை அடகு வைப்பது போன்றது என்ற குரல் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் மட்டத்தில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. முக்கியமாக அவங்க ஆட்சியே நம்மடைய தயவில்தான் நடக்கிறது. அப்படி இருக்க அவர்கள்தான் நம்மை தேடி வர வேண்டும். ஆனால் நாம் அவர்களை தேடிப்போயும் கூட.. அவர்கள் நம்மை மதிக்காமல் இருக்கிறார்கள் என்று விசிக நிர்வாகிகள் குமுறுகிறார்கள்.
எங்கள் தலைவரின் அறிவிப்பை ஆளும் தரப்பு கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது, இயக்கத்தின் கௌரவத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு இல்லையா? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களிலும், கள அளவிலும் விசிக தொண்டர்களால் பகிரங்கமாகவே எழுப்பப்பட்டு வருகின்றன. ஒருதலைப்பட்சமாக ஆதரவை அறிவித்துவிட்டு, அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதை வேடிக்கை பார்ப்பது களத்தில் பணியாற்றும் தொண்டர்களின் மன உறுதியை முற்றிலும் குலைத்துவிட்டதாக மூத்த நிர்வாகிகள் ஆதங்கப்படுகின்றனர்.
வெறும் கூட்டணி அல்லது தொகுதிப் பங்கீட்டு விவகாரங்களைத் தாண்டி, விசிகவின் மூத்த கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் தீவிரமான கருத்தியல் ரீதியான விவாதங்களும் முரண்பாடுகளும் வெடித்துள்ளன.
மத்தியில் உள்ள பாஜகவின் அரசியலை விசிக தொடக்கம் முதலே மிகக் கடுமையான சொற்களில் சமரசமின்றி எதிர்த்து வருகிறது. ஆனால், தேசிய அளவிலான விவகாரங்களிலும், பாஜக எதிர்ப்பு அரசியலிலும் தவெகவின் நிலைப்பாடு மிகக் கவனமாகவும், பூடகமாகவும் மட்டுமே இருப்பதாக விசிகவின் மூத்த தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை விசிக தனது ஜனநாயக உரிமையாக முன்வைத்து வருகிறது. ஆனால், தவெகவின் தற்போதைய ஆட்சியில் அமைச்சர் பதவியை பெயருக்கு கொடுத்துவிட்டு முடிவெடுக்கும் அதிகாரம் எதையும் கொடுக்காமல் உள்ளனர் என்ற குமுறலும் தவெகவிற்கு இருக்கிறது.
தவெகவின் இந்தத் திட்டமிட்ட அமைதிக்குப் பின்னால் ஒரு தெளிவான அரசியல் வியூகம் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். விசிகவின் ஆதரவை உடனடியாக ஏற்றுக்கொண்டு, கொள்கை ரீதியான அழுத்தங்களுக்குள் தங்களைச் சிக்க வைக்க தவெக தலைமை விரும்பவில்லை. சட்டமன்றத்தில் தங்களுக்குத் தேவையான எண்களைத் தக்கவைத்துக்கொள்ளும் அதே வேளையில், பகிரங்கமான தேர்தல் அல்லது கூட்டணி உடன்பாட்டை நோக்கி இப்போதே அவசரப்பட்டு நகர வேண்டாம் என்பதே அவர்களின் கணக்காக உள்ளது.