General

ஐஸ்கிரீம் சாப்பிடும் குழந்தைபோல பேசும் விஜய்.. விளாசிய ராஜேந்திர பாலாஜி

விஜய் வார்த்தையில் எவ்வளவு விளையாட்டுத்தனம் இருக்கிறது. அவர் சினிமாவில் சிரிப்பு நடிகராக நடிக்கலாம், ஆக்சன் நடிகராக நடிக்கலாம். ஆனால் அரசியலில் அவரின் நடிப்பு எடுபடாது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

விஜய் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து பெரம்பூரில் இன்று (மார்ச்30) தனது வேட்புமனுவை தாக்கல் செய்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். பின்னர் முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த விஜய் வேட்பாளரின் பெயரை மாற்றி சொல்லியது அரசியல் அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியில் இன்று பிரச்சாரம் செய்ய இருந்த விஜய் கடைசி நேரத்தில் தனது பரப்புரையை ரத்து செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் 4 முனை அல்ல, 40 முனை போட்டி கூட இருக்கட்டும். ஆனால் உண்மையில் போட்டி களத்தில் இருக்கும் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் என்று விஜய் பேசியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “ஸ்கூலில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பிள்ளைகள் இப்படித்தான் பேசிக் கொள்வார்கள். விளையாட்டுத்தனமாக பேசுவார்கள். அது போல் விஜய் விளையாட்டுத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார். ஊர், உலகம், நாடு நடப்பில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் வார்த்தையில் எவ்வளவு விளையாட்டுத்தனம் இருக்கிறது. அவர் சினிமாவில் சிரிப்பு நடிகராக நடிக்கலாம், ஆக்சன் நடிகராக நடிக்கலாம். ஆனால் அரசியலில் அவரின் நடிப்பு எடுபடாது. அவரை ஒரு வேடிக்கைப் பொருளாக தமிழக வாக்காளர்கள், பொதுமக்கள், அரசியல் ஆர்வலர்கள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

விஜயின் பேச்சு, தேர்ச்சியான ஒரு அரசியல் தலைவராக உருவாகக்கூடிய பேச்சாக இல்லை. உலகத்திற்கே தெரியும், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டி. களத்தில் நிற்கக்கூடியவர்கள். இரண்டு சிங்கங்கள் தான் .. ஒன்று அண்ணா அதிமுகவின் தலைமையில் எடப்பாடியார், மற்றொன்று ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக. இதில் வெற்றி பெறப் போவது யார் என்பது தான் இன்றைய பேசும் பொருள். இதில் அதிமுக வெல்லும் என்பது 100 சதவிகித மக்களின் கருத்துக் கணிப்பு. இதில் ஊடே வந்து ‘நான்தான், நான்தான்’ என்று சொல்வதால் அவரை வேடிக்கைப் பொருளாக, சிரிப்பு நடிகராக மக்கள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அரசியலில் அவரை ஒரு ஜோக்கராகப் பார்க்கிறார்கள்” என்றார்.

விஜய் 234 வேட்பாளர்களை அறிவித்தது குறித்த கேள்விக்கு, “234 பேரில் ஒன்று, இரண்டு பேரைத் தவிர மற்ற எல்லோரும் மிகப் பெரிய பின்னடைவை சந்திப்பார்கள்” என்றார். விஜய் இரண்டு இடங்களில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, “அவருக்கே தன்னம்பிக்கை இல்லை. அதன் காரணமாகத்தான் இரண்டு இடங்களில் நிற்கிறார். அவர் பெயரை அவரே சொல்லிக் கொள்கிறார். அவர் ஒரு ஜாலி மூடில் இருக்கிறார். அவரது பேச்சு, நடவடிக்கை எல்லாம் நாம் ஒரு காமெடியாகப் பார்த்துவிட்டு சென்று விட வேண்டும்” என்றார்.

களத்தில் எடப்பாடி தலைமையில் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு பலமான அமைப்புகள் ஒன்றிணைந்து மிகப் பெரிய சக்தியாக இன்று தமிழக அரசியலில் வானில் துருவ நட்சத்திரம் போல ஜொலிக்கிறார் எடப்பாடி. அவரை மக்கள் முதலமைச்சர் ஆக்குவார்கள் என்றார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version