Government

கர்நாடக முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றார்

கர்நாடக மாநிலத்தின் 34-வது முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமார் இன்று (ஜூன் 3) முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் இடையே முதலமைச்சர் பதவிக்கான பலத்த போட்டி நிலவியது. அப்போது காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு, முதல் 2.5 ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த 2.5 ஆண்டுகள் டி.கே. சிவக்குமாரும் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் வகையில் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் செய்தது.முதல் 3 ஆண்டுகள் சித்தராமையா முதல்வராக பதவி வகித்தார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, தன்னை முதல்வராக்க வேண்டும் என டி.கே. சிவக்குமார் விடுத்த வேண்டுகோளை ஏற்று, காங்கிரஸ் மேலிட உத்தரவின்படி கடந்த மே 28-ஆம் தேதி சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, மே 30-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக டி.கே. சிவக்குமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், ஆளுநர் தவார்ச்சந்த் கெலாட்டைச் சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்தை அவர் சமர்ப்பித்ததை அடுத்து, புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து இன்று மாலை பெங்களூரு லோக் பவனில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் தவார்ச்சந்த் கெலாட், டி.கே. சிவக்குமாருக்கு முதலமைச்சர் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

டி.கே. சிவக்குமாருடன் சேர்ந்து, மாநிலத்தின் புதிய துணை முதலமைச்சராக ஜி. பரமேஸ்வரா பதவியேற்றுக் கொண்டார். இவர்களுடன் சித்தராமையாவின் மகன் யதீந்திரா சித்தராமையா உள்ளிட்ட 12 அமைச்சர்கள் (முதலமைச்சர், துணை முதலமைச்சர் சேர்த்து மொத்தம் 14 பேர்) புதிய அமைச்சரவையில் பதவியேற்றனர்.

பங்கேற்ற தலைவர்கள்:

இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, கேரள முதல்வர் வி.டி. சதீசன் உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதமும், 3ஆவதாக கர்நாடக வாழ்த்துப் பாடலும் இசைக்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில், வந்தே மாதரம் பாடலும் முதலிலும் பின்னர் தேசிய கீதமும் பாடப்பட்டது.

கர்நாடக அரசியலில் நீண்ட நாட்களாக நிலவி வந்த தலைமைத்துவப் போட்டி, இந்த அதிகாரப் பகிர்வின் மூலம் சுமுகமாக நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version