Government

பரந்தூர் திட்டம் ரத்து.. அடுத்து என்ன?.. அரசுக்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் அவசியம் என்றும், மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் கருத்தை கேட்டறிந்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அந்தப் பகுதிக்குக நேரசியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அன்றைய முதலமைச்சரை நேரடியாகச் சந்தித்து இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விசிக சார்பில் கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால், அந்தத் திட்டத்துக்கு எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு விட்டதாகவும், ஒருசில கிராமங்களைத் தவிர பிற பகுதிகளைச் சார்ந்தோர் தங்களுடைய நிலங்களுக்கு உரிய தொகைகளையும் பெறத் தொடங்கிவிட்டதாக அன்றைய அமைச்சர் எவ வேலு விளக்கமளித்தார்.

கைவிடப்பட்ட பரந்தூர் திட்டம்
ஏகனாபுரம் பகுதி மக்கள் எங்கள் கிராமங்களில் உள்ள நிலங்களை விட்டுவிட்டு அதன் அருகே உள்ள அரசுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கரில் உள்ள காலியிடங்களை தேவையான அளவுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறினர். அந்த யோசனையையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். தற்போது, தவெக அரசு பரந்தூர் திட்டத்தை முழுமையாகக் கைவிட்டிருக்கிறது.

மாறாக புதிய விமான நிலையத்திற்கான வேறு இடத்தை தேர்வு செய்வோம் என்ற உறுதியை முதலமைச்சர் வழங்கியுள்ளார். நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் பெரிய பரப்பளவில் தேவைப்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே, முதலமைச்சர் சட்டப் பேரவையில் அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விரைந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மக்களின் கருத்து அவசியம்
எந்த புதிய திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டு வந்தாலும் கூட நிலங்களை கையகப்படுத்தும்போது அந்தப் பகுதி மக்களின் கருத்தை அறிய வேண்டும். அவர்களின் இசைவைப் பெற வேண்டும் என்பது சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. விமான நிலையம், துறைமுகம், ரயில்வே போன்ற எந்தவொரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும், நிலங்களைக் கையகப்படுத்தும் போது அந்த மக்களின் கருத்தை அறிய வேண்டும் என்பது சட்டம்.

அந்த வகையில், ஏகனாபுரம் உள்ளிட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் விளைநிலங்கள் பறிபோவதை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டது நாம் அறிவோம். ஆகவே மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பது சட்டத்திலும் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். புதிய இடங்களைத் தேர்வு செய்யும்போது மக்களின் கருத்தை அறிய வேண்டும்.

புதிய விமானம் தேவை
விமான நிலையம், துறைமுகம், ரயில்வே போன்ற போக்குவரத்து வசதிகள், அதற்கான கட்டமைப்பு வசதிகள மேம்படுத்துவது என்பது மாநிலத்தின் முற்போக்கான வளர்ச்சிக்கு வித்திடும். அந்த வகையில், புதிய விமானம் தேவை. அதே சமயம் மக்களின் இசைவையும் பெற்று வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் எங்களது வேண்டுகோள் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version