Connect with us

Government

மாநிலத்தில் சுயாட்சி.. மத்தியில் கூட்டாட்சி.. அரசியல் சாசனத்தை திருத்துவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒன்றிய – மாநில அரசுகளின் உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 18) சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்து பேசினார்.

மாநில சுயாட்சி குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “அண்ணா இறுதி உயில் போல எழுதியது தான் மாநில சுயாட்சி கொள்கை. அவருடைய மறைவுக்குப் பிறகு கலைஞர் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக வடித்துத் தந்தார். அதனை முழு முதல் கொள்கையாக ஏற்றுக்கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியானது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டும் மாபெரும் முன்னெடுப்பை செய்ய தொடங்கும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நாள் இந்த நாள்.

பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக, கலைஞரின் உடன்பிறப்பாக, ஒன்றிய மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கையின் முதல் பகுதியை இம்மாமன்றத்தில் வைக்க இருக்கிறோம். ஒரு மாநிலமாக நம் மக்கள் காணும் கனவுகளை முழுமையாக நிறைவேற்றும் அளவிற்கு நம்மிடம் அதிகாரங்கள் இல்லை. ஏனென்றால், மாநில உரிமைகள் வழங்கும் ஓர் ஒன்றிய அரசு அமையவில்லை. இருக்கின்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு தான் சமூக நீதியில், கல்வியில், சுகாதாரத்தில், பொருளாதாரத்தில், உள்கட்டமைப்பு வசதிகளில் முன்னேறி வருகிறோம். நில உரிமை, நீதி, நிதி உரிமை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு நாம் இன்னமும் கடுமையாகப் போராட வேண்டிய சூழல் தான் உள்ளது. எனவே, எல்லா அதிகாரமும் கொண்டவைகளாக மாநில அரசுகளை மாற்றும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கும் சட்ட முன்னெடுப்புகளை நாம் தொடங்கக்கூடிய நாள் தான் இன்றைய நாள்

அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் வைத்துள்ள ஒன்றிய அரசு அவற்றை எதேச்சதிகார மனப்பான்மையோடு பயன்படுத்துவதோடு, மாநில அரசுகளையும் மதிப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மாநில அரசுகள் ஒன்றிய அரசின் தயவை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றன. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அவர்கள் கொடுக்கும் இடத்திலும், நாம் வாங்கும் இடத்திலும் இருப்பது? இந்த நிலை மாற வேண்டும். இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நம்முடைய நோக்கத்துக்கான விடை தான் ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை. சுருக்கமாகச் சொன்னால், பூனைக்கு மணி கட்டியிருக்கிறோம்.

அனைத்து மாநிலங்களும் சுயாட்சியை பெற்றவையாக இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சி அரசாக ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் என்ற நம்முடைய இந்தக் கொள்கை தான் மற்ற மாநிலங்களின் உள்ளத்தில் இருந்தும் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் கொள்கையாக இருக்கும். எனவே, அனைத்து மொழிகள், இனங்கள், மதங்கள், பண்பாடுகள் உள்ளடக்கிய மாநிலங்களில் வாழும் மக்களை அவர்களது உரிமைகளோடு உணர்வுகளோடு வாழ வைக்க உன்னதமான மாநில அரசு மாநில சுயாட்சி கொள்கையை அரசியல் எல்லைகளைக் கடந்து அனைவரும் தங்களது அரசியல் கொள்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மாநிலங்களின் உரிமைகள் குறித்து 1963ல் பேரறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் முழங்கினார். 1967ல் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியது. ஒன்றிய மாநில அரசுகளின் உறவுகளை 1969 ல் கலைஞர் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.வி.ராஜமன்னார், டாக்டர் லட்சுமணசாமி முதலியார், பி. சந்திரரெட்டி ஆகியோரைக் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்தார். இந்திய நாடே திரும்பிப் பார்த்தது. அந்தக் குழு விரிவாக ஆய்வு செய்து 1971ல் தனது அறிக்கையை வழங்கியது. ராஜமன்னார் குழு அளித்த முக்கியப் பரிந்துரைகளை இந்த மாமன்றத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றினார் தலைவர் கலைஞர்.

இதனைத் தொடர்ந்து ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையான உறவுகளை மேம்படுத்திட ஒன்றிய அரசின் சார்பில் 1983 நீதிபதி சர்க்காரியா தலைமையிலான ஆணையம்,2000 த்தில் வெங்கடாசலையா ஆணையம் 2007ல் நீதிபதி பூஞ்சி தலைமையிலான குழு ஆகியவை அமைக்கப்பட்டு, அவற்றின் சார்பில் ஆயிரக்கணக்கானப் பக்கங்களைக் கொண்ட அறிக்கைகள் வழங்கப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் ஏமாற்றம் தொடர்கிறது.

இன்னும் சொன்னால், மாநில அரசின் பட்டியலில் உள்ள முக்கிய ஆதாரங்களைக் கூட ஒத்திசைவு பட்டியலுக்குப் மடைமாற்றம் செய்யும் பணிகள் இன்றைய ஒன்றிய அரசால் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே ஒன்றிய அரசிடம் போராடிப் பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம்.

ஒன்றிய நிதிக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலங்களுக்குப் பகிரப்படும் நிதியானது தொடர்ந்து செம்மையான முன்னெடுப்பு நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் முன்னேறி உள்ள மாநிலங்களின் பங்களிப்புக்கு ஈடாக அல்லாமல் குறைவாகப் பகிரப்படுகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில் கூட்டாட்சி கருத்துக்களை வலியுறுத்தும் வகையிலும், ஒன்றிய மாநில அரசுகளின் உறவுகளை, கொள்கைகளை மேம்படுத்திடவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிகூறுகள் நடைமுறையில் உள்ள சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து மதிப்பீடு செய்திடவும் மற்றும் அதற்குரிய நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்திடவும் உயர்மட்ட அளவிலான குழு ஒன்றை அமைப்பதெனத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது.

இப்படி உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி குரியன் ஜோசப்பை தலைவராகவும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான அசோக் வரதன் ஷெட்டி, தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு மேனாள் துணைத் தலைவர் பேராசிரியர் நாகநாதன் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டு அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை கடந்த 16 ம் நாள் என்னிடம் வழங்கியது.

பேரவை உறுப்பினர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசுக்கும் நான் சொல்லிக்கொள்வது மாநில சுயாட்சி வேண்டும். ஒன்றியத்தில் கூட்டாட்சி மலர வேண்டும். இது தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல. இந்திய நாட்டு மக்களின் வாழ்வியலுக்கு வளர்ச்சிக்கு முக்கியமான கோரிக்கை. கூட்டாட்சி என்பது வாழ்வியல் உணர்வு. பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவுக்கு கூட்டாட்சிதான் அடிப்படை. இதைத்தான் அந்த அறிக்கையும் நிரூபிக்கிறது. எனவே, இத்தகைய தன்மை கொண்டதாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாம் மாற்ற வேண்டும். 1994ல் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூட்டாட்சி என்பது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதி என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தகைய கூட்டாட்சி கோட்பாட்டை அரசியலமைப்பு சட்டத்தின் பண்பாடாகச் சேர்க்க வேண்டும். அதற்கு அரசியலமைப்பு சட்ட திருத்தமும் சீர்திருத்தமும் தேவை.

கடந்த 76 ஆண்டுகளில் 106 முறை இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டுள்ளது. எனவே, நாம் முயன்றால் மீண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்த முடியும்.

இந்தியாவை முதிர்ச்சி அடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை நாம் தொடக்கியாக வேண்டும். அதிகாரமும் வாய்ப்புக்களும் ஒரே இடத்தில் குவிந்திருக்கக் கூடாது. அவை பரவலாக்கப்பட வேண்டும். அதற்கான சட்டப்பூர்வமான வழிகளை இந்த அறிக்கை நமக்கு வழங்கி இருக்கிறது. கூட்டாட்சித் தன்மை கொண்டதாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவது இந்திய ஒன்றியத்தை பலவீனப்படுத்தாது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசு கபளீகரம் செய்யும் சூழலில், ஆளுநர்கள் மூலமாக மாநில அரசுகளை செயல்படாமல் தடுக்கும் நிலையில், இந்தித் திணிப்பின் மூலமாக, நிதி நெருக்கடிகளின் மூலமாக தொகுதி மறுவரையறை என்ற சதியால், ஜிஎஸ்டியால் தமிழ்நாடு அனுபவித்து வரும் நெருக்கடிகளிலிருந்து மீள ஒரே மருந்து மாநில சுயாட்சி தான்.

அதனை அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாக மட்டுமே அடைய முடியும். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்தச் கொள்கைக்கான வலிமையான ஆதரவு தெரிவிக்கும் ஜனநாயக சக்திகள் அதிகமாக இருக்கிறார்கள். எண்ணிக்கையாலும், எண்ணங்களாலும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களை ஒன்று திரட்ட வேண்டும். எனவே இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றிய அரசும், மாநிலங்களும் போட்டியாளர்கள் இல்லை. இருவரும் பொதுவான ஒரு அமைப்பின் பங்குதாரர்கள். மாநிலங்கள் வளர்ந்தால் தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளர முடியும் என்பதை ஒன்றிய அரசுக்கு உணர்த்துவோம். இப்படிப்பட்ட பின்னணியில் தான் நமது குடியரசின் அரசியல் சட்டத்தின் உயிர்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான தருணத்தில் நாம் நிற்கிறோம். நாம் இதுவரை பயணித்த பாதையை மீளாய்வு செய்து உண்மையான கூட்டாட்சி கருத்தியல் வலுப்படுத்தும் வகையில் நமது எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டிய நேரம் இது.

இதற்கு சட்டப்பூர்வ வழிமுறைகளை ஆராய்ந்து முதற்கட்ட அறிக்கை வழங்கிய உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி குரியன் ஜோசப், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக் வரதன் ஷெட்டி பேராசிரியர் நாகநாதன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிக்கையைத் தற்போது இந்த மாமன்றத்தின் மேலான பார்வைக்கு வழங்குகிறோம். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பன்முகத்தன்மை, மக்களாட்சி பொறுப்புணர்வு, அரசியலமைப்பு சட்ட ஒழுங்குமுறை ஆகியவற்றோடு முதிர்ச்சி பெற்ற கூட்டாட்சி நாடுகளில் சிறந்த நடைமுறைகளையும் உள்ளடக்கி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கையை அனைவரும் திறந்த மனதோடு ஏற்று, அறிவார்ந்த விவாதங்களை நடத்திச் செம்பைப்படுத்த வேண்டும்.

ஒன்றிய மாநில உறவுகளில் சம நிலையை மீட்டு எடுக்க வேண்டும். மாநிலங்கள் வலுவாக இருந்தால்தான் ஒன்றிய அரசு வலுவாக இருக்கும். மாநிலங்களால்தான் நாடு பெருமையும் வளர்ச்சியும் அடையும். கூட்டாட்சி கருத்தியல் என்பது மாநிலங்களுக்கான சலுகை இல்லை. நாட்டிற்கான பாதுகாப்பு அரண். இதையெல்லாம் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். கொட்டக் கொட்ட குனியக்கூடியவர்கள் அல்ல நாம். பேரறிஞர் அண்ணாவின் உயிலுக்கு உயிர் கொடுப்போம். தலைவர் கலைஞரின் ஐம்பது முழக்கத்தை நிறைவேற்றிக் காட்டுவோம். நாம் தான் இதைச் செய்ய வேண்டும். நம்மை விட்டால் இதைச் செய்ய யாருமில்லை. இது வரலாறு வழங்கி இருக்கக்கூடிய வாய்ப்பு. மலர்க மாநில சுயாட்சி.. உருவாகட்டும் இந்திய குடியரசு..” என தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Politics1 week ago

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை தலைவர் மற்றும் தாழம்பூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் லயன் டி.தேவசித்தம் நிகழ்ச்சி ஏற்பாட்டில் மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…..!

Politics1 week ago

சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி, 199 வது வட்ட கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…!

Politics1 week ago

சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…!

Politics1 week ago

கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் அதிமுக அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் பொறியாளர் லயன் சி.மணிமாறன் நிகழ்ச்சி ஏற்பாட்டில் மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…!

Politics1 week ago

சென்னை அதிமுக புறநகர் மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா…….!

Copyright © 2025 NowTamil.