Cinema
ரெட் கார்டு ‘ஸ்டாக்’ இல்லையா பிக்பாஸ் & விஜய் சேதுபதி?
கோவப்படுற அளவுக்கு காமெடி பண்ணாத என்று ஒரு படத்தில் சந்தானம் சொல்வாரே..
அந்தக் கதைதான் பிக்பாஸில் .
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பரபரப்பாக இருக்கும்படி விளையாட முயற்சி செய்யலாம். ஆனால் சென்சேஷன் என்ற பெயரில் எரிச்சல் ஊட்டும் படி ஏதாவது செய்கிறார்கள் இந்த சீசனில்.
அடிப்படை அறிவு, நடந்து கொள்ளும் முறை,கண்ணியமான பேச்சு இவை எல்லாம் தங்களிடம் இல்லை என்பது குறித்த கூச்சம் சற்றும் இன்றி, அவர்கள் நடந்து கொள்வதால். இந்த பிக் பாஸ் சீசன் எந்த சுவாரசியமும் இல்லாமல் போகிறது .
கோர்ட் நடைமுறை, நீதிபதி, டவாலி பணிகள், இது குறித்த எந்த அறிவும் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். இவர்களுக்காக கோர்ட் செட் போட்டு நிகழ்ச்சி நடத்துவது எல்லாம் ரொம்ப ஓவர்.
நீதிபதிகளை கிண்டல் செய்வது, ஆர்டர்.. ஆர்டர் என்று ஜட்ஜ் சொல்லும் போதும் பேச ஆரம்பிப்பது, இப்படி எல்லாம் நடந்து கொண்டது கேவலம்.
இவர்கள் எல்லாம் ஒரு சினிமாவில் கூட கோர்ட் சீனை பார்த்தது இல்லையா? டிவி சீரியல்களில் ஒரு காட்சியிலாவது கோர்ட் சீனில் நடித்தது இல்லையா? என்ற கேள்வி வருகிறது.
எது எதற்கோ கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரும் நீதிமன்றம், இவர்கள் மேலும் ஒரு கோர்ட் அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்து கோர்ட்டுக்கு இழுத்து அலைய விட்டு கோர்ட் நடைமுறைகளை கற்றுக் கொடுத்தால் அது தப்பே இல்லை.
விஜே பார்வதியின் குடும்பம் வக்கீல் குடும்பமாம். அவரே கோர்ட் நடைமுறைகளுக்கு மாறாக, நடந்து கொண்டபோது, எஃப் ஜே அவரிடம் ” உன் குடும்பம் வக்கீல் குடும்பம்தானே? உனக்குக் கூடவா தெரியாது?’ என்று ஒரு இயல்பான கேள்வியைக் கேட்க, “அய்யயோ.. என் குடும்பத்தை இழுத்து பேசறான். என் மானம் போச்சு மரியாதை போச்சு ….” என்று குலவை போட ஆரம்பித்தார் பாரு.
யார் என்றாலும், என்ன என்றாலும், உடனே அடிப்பது போல போவது ,சோறு திங்கறியா, வேற எதையும் திங்கறியா? உன் வளர்ப்பு எப்படின்னு தெரியுது, என்றும் , பெண்களிடம் மூக்கை விரிச்சுக்கிட்டு வராத. உன் வாயில காக்கா… .. .. என்றெல்லாம் கமருதீன் பேசிக் கொண்டே இருக்கிறார் .
உண்மையில் கமருதீன் தன்னைப் போலவே இருக்கும் இன்னொரு நபரிடம் சண்டை போட்டால் அங்கு ஒரு கொலை விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அதுவும் கமருதீன் செய்யும் அவமானத்தில் திவ்யா மனம் உடைந்து அழும் சமயத்தில், அவரிடம் சாரி சொல்வது போல போய் மீண்டும் கிண்டல் செய்து சிரித்து விட்டு வருகிறார் கமருதீன். மானமும் சுயமரியாதையும் உள்ள எந்த பெண்ணும் இதையெல்லாம் பொறுத்துக்க கொள்ள மாட்டாள். ஆனால் நாக்கைச் சுழட்டி அப்படி ரசிக்கிறார் பாரு .
போட்ட சோறு தொண்டைக்குள் இறங்குவதற்குள் நன்றி மறக்கும் ஆட்கள் என்று கிராமத்தில் ஓர் உவமை சொல்வார்கள். அதுபோல மைக்கை கழட்டி விட்டுப் பேசக் கூடாது என்று அறிவிப்பு வந்த அடுத்த நொடியே மைக்கை கழட்டி எறிந்து விட்டு பாருவும், கமருதீனும் கிசுகிசுத்துக் கொண்டார்கள். சிணுங்கி கொண்டார்கள்.
ஹாலிவுட் பாலிவுட் பிக்பாஸ்களில் பாலியல் சூடேற்றும் சம்பவங்கள் கூட வருவது உண்டு. ஆனால் கமருதீன் பாருவின் சிணுங்கல்கள் ரொம்ப மோசம்
பாருவும் கமருதீனும் பலமுறை மைக் கழட்டி பல முறை ரகசியம் பேசியதால், விஜய் சேதுபதி வந்த உடன் இருவரையும் மைக்கை கழட்டி வைக்கச் சொன்னார். அப்படியே இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு சிறு இடைவெளி விட்டு விட்டு விஜய் சேதுபதி போக,
உடனே எந்த அறிவிப்பும் இன்றி கமருதீன் தானாக மைக்கை எடுத்து போட்டுக் கொள்கிறார் . மீண்டும் விஜய் சேதுபதி கண்டிக்க, மைக்கை கழட்டி வைக்கிறார். அடுத்து மீண்டும் ஒரு சிறு இடைவேளை விடப்பட, உடனே மீண்டும் மைக் எடுத்துக் போட்டுக் கொண்டு, எதற்காக அவர் கண்டிக்கப்படுகிறாரோ அவற்றையே வழக்கம் போலவே செய்கிறார் கமருதீன்.
அவரை பிக்பாஸும் விஜய் சேதுபதியும் கடிப்பது போல பாவ்லா பண்ணி, உண்மையில் சலுகை கொடுத்து அடுத்த வாரத்தில் கேவலமாக நடந்து கொள்ள அனுப்பி வைக்கிறார்கள் .
அநேகமாக கமருதீன் பிக் பாஸ் டீமில் யாருக்கு அவ்வளவு நெருங்கிய உறவு தெரியவில்லை. கமருதீன் என்றால் விஜய் சேதுபதியே கொஞ்சம் பயப்படுவது தெரிகிறது.
கமருதீன் விஷயத்தில் பிக் பாஸ் இப்படி தொடை நடுங்கி நிற்பதன் ரகசியம்தான் புரியவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்டு என்று ஒரு வசதி உண்டு. அதாவது தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும் போட்டியாளரை ரெட் கார்டு கொடுத்து, அப்படியே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றும் நடைமுறை அது.
கமல்ஹாசன் கண்களில் நெருப்போடு ரெட் கார்டை எடுத்து, ” இதை யூஸ் பண்ண வச்சிறாதீங்க…” என்று காட்டினால் பிக் பாஸ் வீடே சப்த நாடியும் அடங்கி உட்காரும்.
ஆனால் இவ்வளவு கேவலமாக ஆடிக் கொண்டிருக்கும் கமருதீனிடம் ரெட் என்ற வார்த்தையைக் கூட பிக் பாஸ் மற்றும் விஜய் சேதுபதி பயன்படுத்தவே இல்லை. (விஜய் சேதுபதி ரெட் கலர் டிரெஸ்ஸில் வந்தால் அது ரெட் கார்டு ஆகி விடுமா?
பிக்பாஸ்அலுவலகத்தில் ரெட் கார்டு ஸ்டாக் இல்லையா? இல்லை என்றால் காசு கொடுத்து வாங்க வசதி இல்லையா? ரெண்டு ரூபாய்க்குக் கூட வாங்கலாமே? ரெண்டு ரூபாய் கூட பிக்பாஸிடம் காசு இல்லையா? விளம்பர வருமானம் அவ்வளவு கம்மியாவா இருக்கு?