Connect with us

Politics

‘மோடிக்கேற்ற ஒரு அடிமை எடப்பாடி’ பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

ஜாடிக்கேற்ற மூடி என்பது போல மோடிக்கேற்ற ஒரு அடிமையாக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று (மார்ச் 30) காலை கொளத்தூரில் வேட்புமனு தாக்கலைத் தொடர்ந்து, திறந்தவெளி வேனில் நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து ரோடு ஷோவில் ஈடுபட்டார்.

இந்நிலையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவின் இல்லத்திற்குச் சென்று அவரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நித்யா சுகுமாரை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும், காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும், புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட தமிழக முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை விவரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுக ஆட்சியில் காஞ்சிபுரத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திற்கு முனிசிபாலிட்டி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, “இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் 11.19% அடைந்து நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. இதற்கெல்லாம் ஒன்றிய பாஜக நமக்கு துணை நின்றார்களா? நாம் கேட்கும் நிதியை கொடுப்பதில்லை. தமிழ்நாட்டிற்கு என்று திட்டங்களை கொண்டு வருவதில்லை. தமிழ்நாட்டிற்கு திட்டங்களும் இல்லை, பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் கூட இல்லை. ஒன்றிய அரசை அதிமுக என்ற அடிமை கூட்டம் தமிழகத்திற்குள் கொண்டு வருகிறது. ஜாடிக்கேற்ற மூடி என்று சொல்வார்கள். அது போல மோடிக்கேற்ற ஒரு அடிமையாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். நாம் முரட்டு பக்தர்கள் பார்த்திருக்கிறோம்.

முரட்டு தொண்டர்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இன்று இந்தியாவே ஒரு முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட முரட்டு அடிமையை விரட்டி அடிக்கக்கூடிய தேர்தல் வரும் சட்டமன்றத் தேர்தல். இதை நீங்கள் நிச்சயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து வரும் பாஜகவை தமிழ்நாடு ஒதுக்கி வைக்க வேண்டும். இதை நாம் செய்து காட்ட வேண்டும். தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்பதை இந்தத் தேர்தலில் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்” என்று ஆவேசமாக விமர்சித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.