Connect with us

Sports

சிஎஸ்கே – தோனி உறவில் விரிசல்.. சிஎஸ்கே-வின் உரிமையாளராக விரும்பியதால் மனக்கசப்பு.. என்ன நடந்தது?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை வாங்குவதற்கு தோனி விருப்பம் தெரிவித்ததாகவும், அவரது கோரிக்கையைச் சிஎஸ்கே நிர்வாகம் நிராகரித்ததால் இரு தரப்பிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிஎஸ்கே அணி தொடங்கிய காலத்தில் இருந்து அந்த அணி பெரிய வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக இருந்தவர் தோனி. அவரது கேப்டன்சியில் அந்த அணி ஐந்து கோப்பைகளை வென்றது. தற்போது தோனி 45 வயதை எட்டிய நிலையில் ஓய்வு பெறும் நிலையில் இருக்கிறார். இந்த சூழலில், சிஎஸ்கே பங்குகளை வாங்க தோனி முடிவு செய்து இருக்கிறார். இதை செய்தால் தோனி சிஎஸ்கே அணியின் உரிமையாளர்களில் ஒருவராக ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே அணியின் பங்குகளை தோனி இலவசமாகக் கேட்காமல், உரிய பணம் கொடுத்து வாங்கவே விரும்பினார். ஆரம்பத்தில் தோனி 25 சதவீத பங்குகளைக் கேட்ட நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் வெறும் 3 சதவீத பங்குகளை மட்டுமே தர முன்வந்தது. பின்னர் தோனி தனது கோரிக்கையை 20 சதவீதமாகக் குறைத்துக் கொண்டார். ஆனால் நிர்வாகம் 4 சதவீதம் மட்டுமே தர சம்மதித்தது.

இறுதிக்கட்டப் பேச்சின் போது தோனி 18 சதவீத பங்குகளுக்கு இறங்கி வந்த நிலையிலும், சிஎஸ்கே நிர்வாகம் அதிகபட்சமாக 5.5 சதவீத பங்குகளை மட்டுமே தர முடியும் எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. எழுத்துப்பூர்வமாக இல்லாமல் வாய்மொழியாக நடந்த இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தோனிக்கும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் இடையே நிலவி வந்த பல ஆண்டு கால உறவில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக வீரர்கள் தேர்வு தொடர்பான முடிவுகளில் தோனியிடம் ஆலோசிக்கப்படவில்லை என்ற அதிருப்தி இருந்து வந்தது. இதற்கிடையே, 18 ஆண்டுகளாகச் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கும் சமீபத்தில் அணியை விட்டு விலகினார்.

காயம் காரணமாகத் தோனி 2026 ஐபிஎல் தொடர் முழுவதிலும் விளையாடவில்லை. 19 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரின் ஒரு சீசன் முழுவதையும் அவர் தவறவிட்டது இதுவே முதல் முறையாகும். கடந்த 2008 முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தோனி, 278 போட்டிகளில் பங்கேற்று 38.30 சராசரியுடன் 5,439 ரன்கள் குவித்துள்ளார். இதில் 24 அரைசதங்களும் அடங்கும். அவரது தலைமையில் சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

கடந்த 2013 சீசனில் 461 ரன்கள் குவித்து அசத்திய தோனி அப்போது தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக 84 ரன்கள் அடித்து இருந்தார். மேலும் 2024 சீசனில் 11 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 220.54 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் ரன் குவித்தார். முன்னதாக கடந்த 2025 சீசனில் தோனி 14 போட்டிகளில் விளையாடி 196 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகத்துடனான இந்த இழுபறி காரணமாக, தோனி மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா அல்லது முற்றிலும் ஓய்வு பெறுகிறேன் என அறிவிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தோனி ஓய்வு பெற்றாலும் சிஎஸ்கே அணியின் ஆலோசகராக இருப்பார் என பலரும் கூறி வரும் நிலையில் இனி அது சாத்தியமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.