Connect with us

Politics

வரலாறு தெரியாமல் பேசுகிறார் எடப்பாடி – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

இந்தி திணிப்பு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வரலாறு தெரியாமல் பேசுகிறார் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டி உள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், “இந்தி திணிப்பை முதலில் யார் கொண்டு வந்தது? மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் இந்தியைக் கொண்டு வந்தார்கள். அப்போது எதிர்த்துப் போராடியது திமுக. இப்போது அவர்களோடு போய்க் கூட்டுச் சேர்ந்துவிட்டு விமர்சனம் வைப்பது எந்த விதத்தில் பொருத்தமானது?” என்று தெரிவித்தார்.

சென்னையில் இன்று (பிப்ரவரி 12) காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில் எடப்பாடி பழனிசாமி இந்தி திணிப்பு குறித்து பேசியது குறித்து கேள்விக்கு,“எடப்பாடி பழனிசாமி ஒரு முன்னாள் முதலமைச்சராக இருந்தவர், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர். கொஞ்சம் எல்லாவற்றையும் படிக்க வேண்டும். ஆனால் அவர் படிப்பதில்லை. யாரோ எழுதிக் கொடுப்பதைத்தான் பேசுகிறார். எழுதிக் கொடுப்பதைப் பேசுபவருக்கு எப்படி வரலாறு தெரியும்?

இந்தி திணிப்பு பிரச்சினை வந்தபோது எம்.சி. சம்பத் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் ஆகிய இருவரும் சென்று ஜவஹர்லால் நேருவை சந்தித்தார்கள். அவரிடம், ‘நாங்கள் இந்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போகிறோம். இந்தி திணிப்பு கூடாது. இருமொழிக் கொள்கைதான் வேண்டும். ஆங்கிலமும், தமிழும் தாக் இருக்க வேண்டும் என்று இருமொழிக் கொள்கையை நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்கள். உடனே ஜவஹர்லால் நேரு, ‘உங்கள் மாநிலம் என்ன விரும்புகிறதோ அதை எங்கள் அரசு செய்யும்’ என்று உத்தரவாதம் அளித்தார். அது மட்டுமல்ல, அவர்கள் நேருவை நாடாளுமன்ற வளாகத்தில் பார்த்துவிட்டு வீடு செல்வதற்கு முன்பு, ஜவஹர்லால் நேரு கையொப்பமிட்டு, ‘இருமொழிக் கொள்கை தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும்’ என்று உத்தரவாதம் அளித்த கடிதம் கொடுத்தார். இந்த வரலாறு எடப்பாடிக்குத் தெரியுமா?

அன்றிலிருந்து இன்றுவரை இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படுகிறது. யாரால் இயற்றப்பட்டது இருமொழிக் கொள்கை? ஜவஹர்லால் நேருவால் கொண்டுவரப்பட்டது.இந்த வரலாறு தெரியாமல் யாரோ எழுதிக் கொடுப்பதைப் பார்த்து பேசுகிறார். நாங்கள் எங்கே மும்மொழிக் கொள்கை கொண்டு வந்தோம்?

ஆரம்பத்தில் ஒரு கருத்து நிலவியது. போராட்டங்களின் எதிரொலி.. எப்போதும் ஒரு வினை என்றால் அதற்கு எதிர்வினை இருக்கும். அதை புரிந்து கொள்பவன்தான் மனிதன். தலைவர்கள் திரும்பப் பெறுவார்கள். மும்மொழிக் கொள்கை வேண்டாம், இருமொழிக் கொள்கை வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வைத்தவுடன், ஜவஹர்லால் நேரு உடனே அதை ஏற்று, இருமொழிக் கொள்கையாக நீடிக்கும். தமிழும் ஆங்கிலமும் இருக்கும் என்று கடிதம் கொடுத்தார். அந்த உத்தரவாதத்தை இன்றுவரை நாங்கள் மீறுகிறோமா? இதெல்லாம் படிக்க வேண்டும்.

இரண்டாவதாக, நவோதயா பள்ளிக்கூடங்களை கொண்டு வர முயற்சி செய்தோம். அப்போது கலைஞர் 2006-ல் நவோதயா பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டுக்கு உகந்ததல்ல என்றார். உடனே திரும்பப் பெற்றுவிட்டார்கள். தமிழ்நாட்டுக்கு எது உகந்ததோ அதை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள் என்றார்கள். இதுதான் ஜனநாயகம். இதுதான் காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆட்சி” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.