Connect with us

Politics

டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்து விட்டுப் போகட்டுமே – திண்டுக்கல் சீனிவாசன்

தமிழகத்தில் திமுகவைத் தவிர வேறு யார் ஆட்சி அமைத்தாலும் அது டெல்லி ஆட்சிதான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், “டெல்லி ஆட்சியாக இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் சென்னையில் விழுப்புரம் மண்டல வாக்குச்சாவடி குழுக்களுக்கான “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற பயிற்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின்,“தற்போதைய சூழலில் திமுகவைத் தவிர யார் ஆட்சிக்கு வந்தாலும் அது சர்வ நிச்சயமாக டெல்லி பாஜக ஆட்சியாகத்தான் இருக்கும். நம்முடைய கூட்டணியைத் தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும், இதுவரை நாம் செய்து வரும் நலத்திட்டங்கள் நின்றுவிடும். வளர்ச்சி அரசியல் மாறி, கலவர அரசியல்தான் தமிழ்நாட்டில் நடக்கும்.

நடக்க இருக்கும் தேர்தல், இரு கூட்டணிகளுக்கு இடையிலான தேர்தல் அல்ல! இது தமிழ்நாடு vs NDA! பாமர மக்களுக்கும் புரியும் வகையில் இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், வெல்லப் போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? இதை முடிவு செய்யப் போவதுதான் இந்தத் தேர்தல்!

ஒன்றிய பாஜக அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, பட்ஜெட், பேரிடர் நிவாரணம், கல்வி நிதி என்று தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு செய்யும் வஞ்சகத்தையும், அதை எதிர்த்துக் கேள்வி எழுப்பாத அடிமை அதிமுகவின் துரோகத்தையும் மக்கள் முன் தோலுரிக்க வேண்டும்” என்று பேசினார்.

இந்நிலையில், இன்று திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “திமுக ஆட்சியைத் தவிர வேறு யார் ஆட்சி அமைத்தாலும் அது டெல்லி ஆட்சிதான்” என்ற முதல்வரின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே. இங்கு ஒரு ரயில்வே ஸ்டேஷன் வேண்டும், மேலும் பத்து ரயில்கள் வேண்டும் என்றால் டெல்லியில்தானே கேட்க வேண்டும்? இவர்கள் அம்மாவிடமா போய்க் கேட்க முடியும்? மத்திய அரசாங்கத்திடம்தானே என்றார்.

திமுக தொடர்ச்சியாக 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை “தமிழ்நாடு vs NDA” என்று கூறி வரும் நிலையில், திண்டுக்கல் சீனிவாசனின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.