Government
சும்மா செலக்ட் பண்ணலை பரந்தூரை.. காரணங்களை அடுக்கிய தங்கம் தென்னரசு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சரும், திருச்சுழி எம்.எல்.ஏவுமான தங்கம் தென்னரசு, பரந்தூர் விமான நிலையம் எந்த தனிநபரின் விருப்பத்திற்காகவும் தேர்வு செய்யப்படவில்லை என்றும், பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சென்னைக்கு புதிய விமான நிலையம் அமைப்பதற்காக சோழிங்கநல்லூர், படாளம், பன்னூர் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக அவர் கூறினார். ஆனால், ஒவ்வொரு இடத்திலும் இருந்த தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு சிக்கல்களால் அவை நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
சென்னையின் கிழக்குப் பகுதியில் வங்கக்கடல் இருப்பதால் விமான நிலையம் அமைப்பதற்கு வாய்ப்பில்லை என்றும், வடக்கில் மணலி, எண்ணூர் தொழிற்பேட்டைகள் மற்றும் பழவேற்காடு ஏரி போன்ற சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இருப்பதாகவும் கூறினார். தெற்கில் தாம்பரம் விமானப்படைத் தளத்தின் வான்வெளி, கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்ற காரணங்களால் அந்தப் பகுதிகளும் பொருத்தமற்றதாக இருந்ததாக விளக்கினார்.
இதையடுத்து மேற்குப் பகுதியில் பன்னூர் மற்றும் பரந்தூர் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விரிவான ஒப்பீட்டுக்குப் பிறகே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார். உயரழுத்த மின் கம்பிகள், தொழிற்சாலைகள், நிலத்தின் விலை, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் குறைந்த அளவிலான மக்கள் பாதிப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
இந்தத் திட்டத்திற்கு இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் ஒன்றிய குடிமை விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அனுமதியும் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஏற்கனவே 2,500-க்கும் மேற்பட்ட பட்டா நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் திட்டத்தை கைவிட்டால் தமிழகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும், பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.